950 ரூபிக்ஸ் க்யூப்கள்… நயன்தாராவுக்காக அந்த விஷயத்தை செய்து அசத்திய 5 பெண்கள்!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் சில மலையாள படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் அறிமுகமான முதல் படமே நயன்தாராவுக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அந்த படம் தான் ‘ஐயா’. இயக்குநர் ஹரி இயக்கியிருந்த இந்த படத்தில் கதையின் நாயகனாக சரத்குமார் நடித்திருந்தார்.

அதன் பிறகு இரண்டாவது படமான ‘சந்திரமுகி’-யில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. ‘சந்திரமுகி’ படத்தின் வெற்றிக்கு பிறகு நயன்தாராவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் ‘கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, ஆதவன், பாஸ் (எ) பாஸ்கரன், தனி ஒருவன், நானும் ரௌடி தான்’ என படங்கள் குவிந்தது.

இப்போது, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் மலையாளத்தில் ‘நிழல், பாட்டு’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நேற்று (மார்ச் 8-ஆம் தேதி) மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ப்ரியா, சங்கீதா, புவனா, பிந்து பிரியங்கா, சந்திரிகா ஆகியோர் இணைந்து 950 ரூபிக்ஸ் க்யூப்களை வைத்து நயன்தாராவின் முகத்தை வடிவமைத்து அசத்தியுள்ளனர்.

Share.