ஷூட்டிங் ஸ்பாட்டில் சிரித்த ரசிகர்கள்… கண்ணீர் விட்டு கதறி அழுத தனுஷ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், தனுஷ் பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் ‘ராக்ஸ்டார்’ அனிருத், காமெடி நடிகர் சதீஷ் ஆகியோரிடம் தனுஷ் அவரது ‘காதல் கொண்டேன்’ படம் தொடர்பாக பேசுகையில் “எனக்கு அப்போது 17 வயது தான். ‘காதல் கொண்டேன்’ படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

அப்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர் ஒருவர் வந்து என்னிடம் ‘யார் இந்த படத்தில் ஹீரோ?’ என்று கேட்டார். நான் அப்படத்தின் இன்னொரு ஹீரோவான சுதீப்பை காண்பித்து ‘இவர்தான்’ என்று சொன்னேன். உடனே, அந்த ரசிகர் சுதீப்புடன் ஸ்டில் எடுத்துக் கொண்டார். பின், இன்னொரு ரசிகர் ஒரு உதவி இயக்குநரிடம் ‘யார் ஹீரோ?’ என்று விசாரிக்க, அவர் என்னை காண்பித்திருக்கிறார்.

அதன் பிறகு முதலில் வந்து விசாரித்த ரசிகர், சுதீப் தான் ஹீரோ என்று இன்னொரு ரசிகரிடம் சொன்னார். ஒரு கட்டத்தில் படத்தின் ரியல் ஹீரோ நான் தான் என்று அவர்களுக்கு தெரிந்து விட்டது. உடனே, அங்கிருந்த எல்லோரும் என்னை பார்த்து நக்கலாக சிரிக்கத் தொடங்கி விட்டார்கள். பின், நான் காருக்கு சென்று கண்ணீர் விட்டு கதறி அழுதேன். அப்போது, என்னை அந்த வயதில் கல்லூரிக்கு படிக்க அனுப்பாமல் சினிமாவில் நடிக்க சொல்லி கட்டாயப்படுத்திய என் அப்பா மீது தான் எனக்கு ரொம்ப கோபம் வந்தது” என்று தனுஷ் கூறினார்.

Share.