அடேங்கப்பா… நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். 2002-ஆம் ஆண்டு தான் இயக்கிய ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தன் மகன் தனுஷை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார் கஸ்தூரி ராஜா. இந்த படத்துக்கு பிரபல இயக்குநரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் தான் திரைக்கதை எழுதியிருந்தார்.

இந்த படம் ஹிட்டானதும், செல்வராகவனே தனுஷை வைத்து ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தினை இயக்கினார். இதுவும் வெற்றி பெற்றவுடன், தனுஷ் நடித்த படம் ‘திருடா திருடி’. சுப்ரமணியம் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் இடம்பெற்ற ‘மன்மத ராசா’ என்ற பாடலுக்கு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்பாடலுக்காகவே அப்படம் மெகா ஹிட்டானது.

அதன் பிறகு பல படங்கள் நடித்த தனுஷுக்கு செல்வராகவனின் ‘புதுப்பேட்டை, மயக்கம் என்ன’, வெற்றிமாறனின் ‘பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன்’ போன்ற படங்கள் அவரின் நடிப்புத் திறமைக்கு மிகப் பெரிய ஸ்கோப்பாக அமைந்தது. பாலிவுட்டில் ‘ராஞ்சனா, ஷமிதாப்’, ஹாலிவுட்டில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர்’ என மற்ற மொழிப் படங்களிலும் தன் நடிப்பாற்றலால் அசரடித்தார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராக அவதாரம் எடுத்து ‘ப.பாண்டி’ படத்தை இயக்கினார்.

இப்போது தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன், சேகர் கம்முலா படங்கள் மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 10 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

2004-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ், முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா ‘3, வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நேற்று (ஜனவரி 17-ஆம் தேதி) இரவு நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு ரூ.200 கோடி என தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த வீடு ரூ.150 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாய் கட்டப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Share.