பிரபல குணச்சித்திர நடிகர் ‘பூ’ ராமு காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், பாடகி லதா மங்கேஷ்கர் என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.

இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ‘பூ’ ராமு. இவர் தமிழில் ‘பூ, நீர்ப்பறவை, தங்க மீன்கள், திலகர், பேரன்பு, பரியேறும் பெருமாள், கண்ணே கலைமானே, நெடுநல்வாடை, க/பெ.ரணசிங்கம், சூரரைப் போற்று, கர்ணன், கோடியில் ஒருவன்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் ‘பூ’ ராமு உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று (ஜூன் 27-ஆம் தேதி) இரவு ‘பூ’ ராமு சிகிச்சை பலனின்றி காலமானார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share.