நடிகர் சிலம்பரசனின் கார் மோதி முதியவர் பலி… வெளியானது சிசிடிவி-யில் பதிவான காட்சி!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. பிரபல ஹீரோவும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் ஆரம்பத்தில் ‘உறவைக் காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், எங்க வீட்டு வேலன்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

சிலம்பரசன் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்த படம் ‘காதல் அழிவதில்லை’. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும் சிலம்பரசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், கடந்த மார்ச் 18-ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை இளங்கோவன் தெருவில் முனுசாமி (வயது 70) என்பவர் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த நடிகர் சிலம்பரசனின் கார் அவர் மீது மோதியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் முனுசாமியை மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், முனுசாமி சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். சம்பவம் நடந்தபோது காரை டிரைவர் செல்வம் ஓட்டிச் சென்றிருக்கிறார். மேலும், டி.ராஜேந்தரும் அவரது குடும்பத்தினரும் காரில் பயணித்திருக்கிறார்கள். தற்போது, டிரைவர் செல்வத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.