‘கொரோனா’ தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய நடிகர் சூரி!

‘காமெடி’ என்று சொன்னாலே சூரியின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் சூரி பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம். டைமிங் காமெடி மற்றும் டயலாக் மாடுலேஷன் தான் சூரியின் ஸ்பெஷல். சூரி திரையுலகில் என்ட்ரியான போது சில படங்களில் தனக்கு கிடைத்த சின்ன ரோலில் தான் நடித்து வந்தார்.

இப்படி சென்று கொண்டிருந்த சூரியின் கிராஃப் டக்கென உயரத்திற்கு சென்றது ‘வெண்ணிலா கபடிகுழு’ படத்தால் தான். ‘பரோட்டா’வை பார்த்தாலே ‘வெண்ணிலா கபடிகுழு’வில் வரும் பரோட்டா சீன் தான் மைண்டுக்கு வரும். இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு சூரிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து சூரியின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது சூரி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஒரு படம் சூரிக்கு ரொம்பவும் ஸ்பெஷலாக இருக்கப் போகிறது. ஏனெனில், இப்படத்தில் சூரி கதையின் நாயகனாக வலம் வரப்போகிறார்.

‘விடுதலை’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதால், மக்கள் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 11-ஆம் தேதி அவரது ட்விட்டர் பக்கத்தில் “#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்! பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் .நன்கொடை – செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார்.

தற்போது, கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் சூரி ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “நடிகர் அண்ணன் சூரி அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், தன் மகள் வெண்ணிலா – மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். சூரி அண்ணன் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்” என்று கூறியுள்ளார்.

Share.