பிரபல நடிகை ‘நல்லெண்ணெய்’ சித்ரா காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!
August 21, 2021 / 11:47 AM IST
|Follow Us
சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.
இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ‘நல்லெண்ணெய்’ சித்ரா. இவர் தமிழில் ‘அபூர்வ ராகங்கள், அவள் அப்படித்தான், ராஜ பார்வை, ஆட்டோ ராஜா, ஊர்க்காவலன், புத்தம் புது பயணம், சேரன் பாண்டியன், பொண்டாட்டி ராஜ்யம், பெரிய குடும்பம், கோபாலா கோபாலா’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை சித்ரா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, நடிகை சித்ராவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.