“நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம்”… ‘கொரோனா’ விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். திரையுலகில் என்ட்ரியான புதிதில் சில படங்களில் நடித்திருந்தாலும், ‘அட்டகத்தி’ என்ற படத்தில் தான் ஆடியன்ஸ் மனதில் ரெஜிஸ்டர் ஆனார். அதன் பிறகு நடித்து 2015-ஆம் ஆண்டு ரிலீஸான ‘காக்கா முட்டை’ என்ற திரைப்படம் தான் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசுறேன், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை, கடலை, கட்டப்பாவ காணோம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், லக்ஷ்மி, சாமி ஸ்கொயர், செக்கச்சிவந்த வானம், வடசென்னை, கனா, மெய், நம்ம வீட்டுப் பிள்ளை, வானம் கொட்டட்டும்’ என படங்கள் குவிந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

தற்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எட்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதால், மக்கள் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 11-ஆம் தேதி அவரது ட்விட்டர் பக்கத்தில் “#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்! பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் .நன்கொடை – செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார். சமீபத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1 லட்சமும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்துக்கு (FEFSI) ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கினார். இந்நிலையில், இன்று ‘கொரோனா’ விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Share.