‘இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டு கதவைத் தட்டும்’… தனுஷை வாழ்த்திய பாரதிராஜா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ராயன், மாறன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், சேகர் கம்முலா படம் (தெலுங்கு / தமிழ் / ஹிந்தி), ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 11 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இன்று (ஜூலை 28-ஆம் தேதி) நடிகர் தனுஷின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திரையில் தோன்றும் ஒரு சில கதாபாத்திரங்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுருவி நம் உணர்வோடு, உறவோடு பின்னப்பட்டதாய் அமைந்துவிடும்.

ஆனால், கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான குண நலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்துவிடுவதுண்டு. நிஜ வாழ்க்கையில் எப்படியோ… அதை திரையிலும் பிரதிபலிப்பவர்கள் ஒரு சிலரே… அதில் உன்னை நான் முதன்மையானவனாகப் பார்க்கிறேன்.

எளிமை, தன்னடக்கம், விருதுகள் வென்று குவித்தாலும் ‘நான்’ என்கின்ற அகந்தை அற்ற பணிவு… சிறந்த கலை தொழில் நுட்ப அறிவு இது போதும் டா… இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டு கதவைத் தட்டும். பேரன்புமிக்க ‘தங்க மகன்’ தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Share.