‘ஹேப்பி மொரட்டு சிங்கிள்ஸ் டே’… கேக் வெட்டி கொண்டாடிய ‘பிக் பாஸ் 4’ போட்டியாளர்கள்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித், தொகுப்பாளினி அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 14-ஆம் தேதி) காதலர் தினத்தன்று பிக் பாஸ் 4 போட்டியாளர்களான பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ஆஜித், சம்யுக்தா, ஷிவானி நாராயணன், கேப்ரில்லா ஆகியோர் நேரில் சந்தித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த சந்திப்பின் போது ‘ஹேப்பி மொரட்டு சிங்கிள்ஸ் டே’ என்று சொல்லி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பாலாஜி முருகதாஸ் இன்ஸ்டாகிராமில் “ஃப்ரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு” என்று ஸ்டேட்டஸ் தட்டி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.