ஷூட்டிங் ஸ்பாட்டில் தவறி விழுந்த நடிகர் சேரனுக்கு படுகாயம்… வருத்தத்தில் ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருபவர் சேரன். சேரன் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘பாரதி கண்ணம்மா’. அதன் பிறகு ‘பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி’ போன்ற படங்களை இயக்கிய சேரனுக்கு, இயக்குநரும் – ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். அந்த படம் தான் ‘சொல்ல மறந்த கதை’.

‘சொல்ல மறந்த கதை’-க்கு பிறகு சேரன் இயக்கி, நடித்த படங்கள் ‘ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம், திருமணம்’. அதன் பிறகு நடிகர் சேரனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து மற்ற இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்க நடிகர் சேரனின் கால்ஷீட் டைரியில் ‘பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய், முரண், சென்னையில் ஒரு நாள், மூன்று பேர் மூன்று காதல், ராஜாவுக்கு செக்’ என படங்கள் குவிந்தது. பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார் சேரன்.

இப்போது சேரன் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து கொண்டிருக்கிறார். இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக கெளதம் கார்த்திக் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. வீடு ஒன்று இப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. இந்நிலையில், அந்த வீட்டில் ஷூட்டிங் நடத்தும் போது கால் இடறி விழுந்த சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சேரனின் தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டுள்ளதாம். தற்போது, இது தொடர்பாக சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நலம் விசாரிக்கும் நண்பர்களுக்கு வணக்கம்.. நலமாக இருக்கிறேன்.. பயம் ஒன்றும் இல்லை.. உங்களின் அன்பால், கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டேன் என்பதே சரி.. அனைவரும் அனைத்து வேலைகளிலும் கவனமாக இருக்கவும்.. நன்றி அனைவருக்கும்” என்று கூறியுள்ளார்.

Share.