“விஜய் சாரின் ‘பீஸ்ட்’டில் காமெடியை விட ஆக்ஷன் தூக்கலா இருக்கும்”… மாஸான தகவலை சொன்ன இயக்குநர் நெல்சன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார். சமீபத்தில், ‘அரபிக் குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய 2 பாடல்களை ரிலீஸ் செய்தனர். படத்தின் ட்ரெய்லரை வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கும், படத்தை ஏப்ரல் 13-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, ‘பீஸ்ட்’ குறித்து இயக்குநர் நெல்சன் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “நான் விஜய் சாரோட தீவிர ரசிகன்.

விஜய் சாரோட படத்துக்கு எந்த மாதிரி எக்ஸ்பெக்டேஷனோட ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவாங்கன்னு எனக்கு தெரியும். கண்டிப்பா இந்த படம் அவங்களை திருப்திப்படுத்தும். நான் நயன்தாராவை வச்சு பண்ண ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயனை வச்சு பண்ண ‘டாக்டர்’ மாதிரி ‘பீஸ்ட்’ இருக்காது. இதுலயும் காமெடி கலக்கலா இருக்கும். ஆனா, அதை விட ஆக்ஷன் தூக்கலா இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Share.