“விஜய்யின் ‘கத்தி’யில் நடித்ததற்கு சம்பளம் தரவில்லை”… கொந்தளிக்கும் கண்ணதாசனின் மகன்!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கண்ணதாசனின் மகன் தான் கோபி கண்ணதாசன். இவர் விக்ரம் பிரபுவின் ‘இவன் வேற மாதிரி’, ‘தளபதி’ விஜய்யின் ‘கத்தி’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’ போன்ற படங்களில் முக்கிய ரோல்களில் நடித்திருந்தார். தற்போது, நடிகர் கோபி கண்ணதாசன் மீடியாவுக்கு கொடுத்துள்ள ஒரு பேட்டியில் “நான் விஜய்யின் ‘கத்தி’ படத்தில் நீதிபதி ரோலில் நடித்திருந்தேன்.

அந்த படத்தில் நடித்ததற்கு எனக்கு பாதி சம்பளம் மட்டுமே அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘லைகா’ எனக்கு கொடுத்தது. இன்று வரை பேலன்ஸ் சம்பளம் எனக்கு கொடுக்கவே இல்லை. தயாரிப்பு தரப்பில் விசாரித்தால், புரொடக்ஷன் மேனேஜரிடம் எனது முழு சம்பளத் தொகையையும் கொடுத்ததாக சொல்கிறார்கள். புரொடக்ஷன் மேனேஜரிடம் கேட்டால், சம்பளத்துக்காக இப்படி பிரச்சனை பண்ணீட்டு இருக்கீங்களே? என்று கேட்கிறார்.

பின், இதே ‘லைகா’ நிறுவனம் தயாரிக்கும் த்ரிஷாவின் ‘ராங்கி’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமானேன். ஏற்கனவே, நான் ‘கத்தி’ படத்துக்கான பேலன்ஸ் சம்பளத்தை கேட்டதால், ‘லைகா’ தயாரிப்பு நிர்வாகிகள் சிலர் எனக்கு எதிராக சில வேலைகளை செய்யத் தொடங்கினார்கள். விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் எனக்கு முக்கிய ரோலில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால், அதுக்கு நான் கொடுத்திருந்த தேதிகளை தெரிந்து கொண்ட ‘லைகா’ தயாரிப்பு நிர்வாகிகள், ‘ராங்கி’ படத்தின் படப்பிடிப்பும் அதே தேதிகளில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற உள்ளதாக என்னிடம் கூறினார்கள்.

நான் ‘ராங்கி’யில் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்ததால், ‘மாஸ்டர்’ படத்துக்காக கால்ஷீட் கொடுக்க முடியாமல் நடிக்க மறுத்து விட்டேன். அதன் பிறகு ‘லைகா’ நிறுவனம் தயாரித்த ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கவும் என்னை ஒப்பந்தம் செய்தார்கள். ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்க முடியாமல் போனது போல், வேறு ஒரு படத்திலும் நடிக்க முடியாத படி எனக்கு ‘இந்தியன் 2’வுக்கான ஷூட்டிங் இருப்பதாக சொன்னார்கள். பின், நான் இன்னொரு படத்தின் வாய்ப்பை மறுத்த பிறகு, ‘இந்தியன் 2’ ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்கள்.

இதே போல், நான் இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்கு முன்பும், ‘லைகா’ நிர்வாகிகள் பல காரணங்கள் சொல்லி என்னை நடிக்க விடாமல் செய்ய முயற்சி செய்தார்கள். பின், ‘பொன்னியின் செல்வன்’ முடித்த பிறகு சொல்லுங்கள் என்று சொல்லி விட்டார்கள். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தேன். அவங்களும் நடவடிக்கை எடுக்க மறுத்துட்டாங்க. விரைவில் இந்த பிரச்சனையில் சட்டத்துக்கு உட்பட்டு என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க முடியும்னு பார்த்துட்டு அதை கண்டிப்பாக செய்வேன். பாடலாசிரியர் கண்ணதாசனின் மகனான எனக்கே தமிழ் சினிமாவில் இந்த மாதிரி நிலைமைன்னா, புதுசாக நடிக்க வரும் நடிகர்களின் நிலைமையை பற்றி யோசித்து பாருங்கள்” என்று கூறியுள்ளார்.

Share.