முதல் முறையாக ஆங்கில இசை ஆல்பம்… மகிழ்ச்சியுடன் ஜி.வி.பிரகாஷ் போட்ட ட்வீட்!

தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். 2006-ஆம் ஆண்டு ‘வெயில்’ என்ற படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இளம் வயதில், அவரின் இசைப் பயணம் ஆரம்பமானது. ஜி.வசந்த பாலன் இயக்கியிருந்த அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. ‘வெயில்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இசையமைக்க வாய்ப்புகள் குவிந்தது.

அடுத்ததாக அஜித்தின் ‘கிரீடம்’, தனுஷின் ‘பொல்லாதவன்’, ரஜினிகாந்தின் ‘குசேலன்’, கார்த்தியின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, விக்ரமின் ‘தெய்வத் திருமகள்’ என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார் ஜி.வி.பிரகாஷ் குமார். இசையமைப்பாளராக டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், 2015-ஆம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அதுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டாக, ஜி.வி.பிரகாஷின் கால்ஷீட் டைரியில் நடிக்கவும் ஆஃபர்கள் குவிந்தது.

இப்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் முதல் முறையாக சர்வதேச ஆங்கில இசை ஆல்பம் ஒன்றுக்கு இசையமைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ‘கோல்ட் நைட்ஸ்’ (COLD NIGHTS) என இந்த ஆல்பத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சிங்கிள் டிராக்கை வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Share.