ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ARREST_BRIGIDASAGA என்ற ஹேஸ்டேக்… சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட ‘இரவின் நிழல்’ பிரிகிடா!

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி, ஹீரோவாக நடித்து, தயாரித்திருக்கும் புது படமான ‘இரவின் நிழல்’ கடந்த ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

ஒரே ஷாட்டில் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘இரவின் நிழல்’ படத்தில் ஒரு நான் லீனியர் திரைக்கதையை ஒரே ஷாட்டில் படமாக்கி புதிய சாதனை படைத்திருக்கிறார் பார்த்திபன்.

இதில் மிக முக்கிய ரோல்களில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரியங்கா ரூத், பிரிகிடா, சிநேகா குமார், ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடித்த நடிகை பிரிகிடா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “நாம் சேரிக்கு சென்றால் அங்கு கெட்ட வார்த்தைகளை தான் கேட்க முடியும். அங்க அப்படித்தான் பேசுவாங்கன்னு மக்களுக்கும் தெரியும். அதுனாலதான் படத்துலையும் அதே மாதிரி கெட்ட வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்தியிருக்கோம்” என்று பேசியிருக்கிறார்.

பிரிகிடா பேசிய விஷயம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், ட்விட்டரில் #ARREST_BRIGIDASAGA என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தற்போது, பிரிகிடா மன்னிப்பு கேட்டு ட்வீட் போட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் “பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம். 1989-ல் நடக்கும் கதையிது. 2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம், கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால். என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே!” என்று பதிவிட்டுள்ளார்.

Share.