‘பகலவன்’ கதை சர்ச்சை… லிங்குசாமி மீது சீமான் அளித்த புகார் குறித்து கே.பாக்யராஜ் அறிக்கை!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லிங்குசாமி. சமீபத்தில், இயக்குநர் லிங்குசாமி இயக்க உள்ள புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இந்த படத்தில் டோலிவுட்டில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ராம் போதினேனி நடிக்க உள்ளாராம். இப்படம் நடிகர் ராம் போதினேனியின் கேரியரில் 19-வது படமாம். இது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ளதாம்.

இதனை ‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்’ என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இதில் ராம் போதினேனிக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க உள்ளார். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இதன் ஷூட்டிங்கை வருகிற ஜூலை 12-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளார் லிங்குசாமி. இந்நிலையில், இப்படத்தின் கதை தனது ‘பகலவன்’ கதையின் சாயலில் இருக்கிறது என்று கூறி திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் இயக்குநர் லிங்குசாமியின் மீது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி புகார் கொடுத்திருக்கிறார்.

தற்போது, இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அன்புள்ள உறுப்பினர்‌ திரு. சிமான்‌ அவர்களுக்கு, வணக்கம்‌. நீங்கள்‌, நமது சங்கத்தில்‌ பதிவு செய்த உங்களது, ‘பகலவன்‌’ கதை சம்மந்தமாக ஒரு புகார்க்‌ கடிதம்‌, 28.4.2021 தேதியன்று சங்கத்திற்கு கொடுத்தீர்கள்‌. உடனே, சங்கத்தின்‌ அனைத்து புகார்க்குழு உறுப்பினர்களுக்கும்‌, மற்றும்‌ தாங்கள்‌ யார்‌ மீது புகார்‌ தந்தீர்களோ அந்த உறுப்பினர்‌ திரு.லிங்குசாமி அவர்களுக்கும்‌ விஷயம்‌ தெரிவிக்கப்பட்டது.

K Bhagyaraj's Statement About Seeman Lingusamy's Pagalavan Story Controversy1

அதற்கு திரு.லிங்குசாமி அவர்கள்‌, உடனே சங்கத்தின்‌ மேலாளரிடம்‌ தொடர்பு கொண்டு, நீங்கள்‌ கொடுத்த உங்களது இதே ‘பகலவன்‌’ கதைப்புகார்‌ சுமார்‌ எட்டு வருடங்களுக்கு முன்பே தங்களால்‌ ஒருமுறை கொடுக்கப்பட்டு, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள்‌ சங்கத்தில்‌ திரு.விக்ரமன்‌, திரு.ஆர்கே.செல்வமணி ஆகிய இருவரால்‌ விசாரிக்கப்பட்டு, சமரசமும்‌ செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்‌. மேலும்‌ 17.10.2013 அன்று நடந்த சமரச தீர்வின்‌ கடித நகலையும்‌ எங்களுக்கு அனுப்பி வைத்தார்‌. அந்த தீர்வின்‌ நகலை, சங்கத்தின்‌ புகார்க்குழுவினர்கள்‌ அனைவரும்‌ படித்தோம்‌. அந்த சமரச தீர்வின்‌ கடித நகல்‌ உடன்‌ இணைக்கப்பட்டுள்ளது.

மேற்படி கடித ஒப்பந்தப்படி நீங்களும்‌, திரு.லிங்குசாமி ஆகிய இருவரும்‌ கையொப்பமிட்டுள்ளீர்கள்‌. சங்கத்தின்‌ தலைவர்‌ திரு.விக்ரமன்‌ அவர்களும்‌, பொதுச்செயலாளர்‌ .ஆர்கே.செல்வமணி அவர்கள்‌ இருவரும்‌ சாட்சி கையொப்பமிட்டுள்ளார்கள்‌. இப்படிப்பட்ட சமரச ஒப்பந்தத்தை படித்த சங்கத்தின்‌ புகார்க்குழு உறுப்பினர்கள்‌ அனைவரும்‌, உறுப்பினர்‌ திரு.லிங்குசாமி அவர்கள்‌ ஒப்பந்த நிபந்தனைகளை மீறவில்லை. எனவே, நீங்கள்‌ உறுப்பினர்‌ திரு.லிங்குசாமி அவர்கள்‌ மீது கொடுத்துள்ள புகாரின்‌ அடிப்படையில்‌, நடவடிக்கை எடுப்பதற்கு நம்‌ சங்கத்திற்கு எந்த முகாந்திரமும்‌ இல்லை என்று ஏகமனதாக கருத்தைத்‌ தெரிவித்துள்ளனர்‌ என்பதை உங்களுக்கு தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. நன்றி” என்று கூறியுள்ளார்.

Share.