திரையரங்குகளில் 50% ஆடியன்ஸ் அமர மட்டுமே அனுமதி… சொன்னபடி ரிலீஸாகுமா ‘கர்ணன்’?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘கர்ணன்’ என்ற படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே கதிரை வைத்து ‘பரியேறும் பெருமாள்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கர்ணன்’ படத்தில் கதையின் நாயகியாக ரஜிஷா விஜயன் வலம் வருவாராம். மேலும், கௌரி கிஷன், யோகி பாபு, லால், அழகம் பெருமாள் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் டீசர் மற்றும் ‘கண்டா வரச்சொல்லுங்க’, ‘பண்டாரத்தி புராணம்’, ‘தட்டான் தட்டான்’, ‘உட்ராதீங்க யப்போவ்’ ஆகிய நான்கு பாடல்களையும் ரிலீஸ் செய்தனர். படத்தை நாளை (ஏப்ரல் 9-ஆம் தேதி) ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்போது கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்க வளாகங்கள் (multiplex), வணிக வளாகத்தில் (shopping malls) உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ‘கர்ணன்’ நாளை ரிலீஸாகுமா? என்ற கேள்வி எழுந்தது. தற்போது, இது தொடர்பாக ‘கர்ணன்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு ட்விட்டரில் “சொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், #Karnan திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

Share.