“பிரமாண்ட படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்தவர்”… இயக்குநர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கமல்!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ஜென்டில் மேன்’. ‘ஜென்டில் மேன்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவருக்கு ‘காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0’ போன்ற படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஷங்கர் இயக்கத்தில் ரெடியாகி வந்த புதிய படமான ‘இந்தியன் 2’வில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடித்து வந்தார். இப்படத்தின் புது ஷெடியூல் ஷூட்டிங் இம்மாதம் (செப்டம்பர்) ஆரம்பமாகவிருக்கிறது. ‘இந்தியன் 2’ மட்டுமில்லாமல் இயக்குநர் ஷங்கர் தெலுங்கு மொழியில் ஒரு படமும், ஹிந்தி மொழியில் ஒரு படமும் இயக்க சமீபத்தில் ஒப்பந்தமானார். இதில் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் படத்தில் ஹீரோவாக டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்கிறார்.

ஹிந்தி மொழியில் உருவாக உள்ள படத்தில் ஹீரோவாக பாலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ரன்வீர் சிங் நடிக்க உள்ளாராம். சமீபத்தில், வேல்ஸ் பல்கலைக்கழகம் இயக்குநர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர்
ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ஷங்கர் “நிச்சயமாக ‘இந்தியரே’.
என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து. மிக்க நன்றி கமல் ஹாசன் சார்” என்று பதில் ட்வீட் போட்டுள்ளார்.

Share.