‘காட்டேரி’ படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பு… தயாரிப்பு நிறுவனம் அறிக்கை!

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 25) ‘காட்டேரி’ என்ற ஹாரர் படம் வெளியாகவிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்டுடியோ கிரீன்’ தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

இப்பொழுது நிலவும் குழப்பான மற்றும் நிலையில்லாத் தன்மையை கருத்தில் கொண்டும், இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் எங்கள் தயாரிப்பில் டிசம்பர் 25-ஆம் தேதி வெளிவர இருக்கும் ‘காட்டேரி’ திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் காட்டேரி திரைப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். நன்றி” என்று கூறியுள்ளனர். இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஹீரோவாக வைபவ் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் வரலக்ஷ்மி சரத்குமார், சோனம் பாஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோட், பொன்னம்பலம், கருணாகரன், மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

Share.