மீண்டும் OTTயில் வெளியாகவுள்ள கீர்த்தி சுரேஷ் திரைப்படம்!

2015ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான “இது என்ன மாயம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

பிரபல நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், 2000 ஆம் ஆண்டு மலையாள படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன், தனுஷுடன் தொடரி, விஜய்யுடன் பைரவா, சூர்யாவுடன் தானாசேர்ந்தகூட்டம், விக்ரமுடன் சாமி2, விஷாலுடன் சண்டக்கோழி 2, மீண்டும் விஜய்யுடன் சர்க்கார் போன்ற முன்னணி நடிகர்களுடன் வெற்றி படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென நீங்காத இடத்தை தற்போது பிடித்துள்ளார்.

அறிமுக இயக்குனரான ஈஷாவர் கார்த்திக் இயக்கத்தில் “பெண்குயின்” படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படம் ஓடிடியில் வெளியானது.

தற்போது திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி வழங்கிய நிலையில் திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. அதனால் சூரரைப்போற்று போன்ற பெரிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள “மிஸ் இந்தியா” என்ற திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும், இந்த படத்தை நெட்விலிக்ஸ் சுமார் 10 கோடிக்கு பெற்றுள்ளது என்றும் செய்தி வெளிவந்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, நதியா, நவீன் சந்திரா, ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். நரேந்திரநாத் இந்த படத்தை இயக்கியுள்ளார். தொடர்ந்து பெரிய நடிகர், நடிகைகளின் படங்கள் தற்போது ஓடிடிக்கு படையெடுத்துள்ளது.

Share.