“ஓட்டு போடவில்லையா?”… விளக்கமளித்த இயக்குநர்கள் லிங்குசாமி – சமுத்திரக்கனி!

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முன் தினம் (ஏப்ரல் 6-ஆம் தேதி) நடைபெற்றது. பல திரையுலக பிரபலங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘உலக நாயகன்’ கமல் ஹாசன், ‘தளபதி’ விஜய், ‘தல’ அஜித் வாக்களித்தபோது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.

குறிப்பாக விஜய் செய்த விஷயம் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. ஆம், விஜய் அவரது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். உச்ச நட்சத்திரமான ஒருவர் இப்படி சைக்கிளில் வந்து வாக்களித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆனால், அஜித்தை அவரது ரசிகர்கள் டென்ஷனாக்கி விட்டனர். அஜித் அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

வாக்குச்சாவடியில் ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க அருகில் வந்தனர், அப்போது கோபமான அஜித் ஒரு ரசிகரின் செல்போனை பிடுங்கி விட்டார். நேற்று முன் தினம் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்காத திரையுலக பிரபலங்களின் லிஸ்ட்டில் இயக்குநர்கள் சமுத்திரக்கனி மற்றும் லிங்குசாமியின் பெயர்கள் இருந்தது. தற்போது, இது தொடர்பாக லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ராஜமுந்திரியில் எனது அடுத்த படத்திற்கான வேலைக்கு இடையில், என் வாக்கை செலுத்தவே சென்னைக்கு வந்து பதிவு செய்தேன்.

சில ஊடகங்கள் நான் வாக்கை செலுத்தவில்லை என்று தவறாக செய்தி வெளியிட்டுள்ளது. நான் எனது கடமையை செய்தது போல் நீங்களும் உங்கள் கடமையை சரியாக செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனி வெளியிட்டுள்ள வீடியோவிலும் “காலை 7:40 மணிக்கே முதல் ஆளாக ஓட்டு போட்டு விட்டேன். என் கடமையை நான் சரியாக செய்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.

Share.