ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்… விஜய்-க்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் அபராதத்துக்கு இடைக்காலத் தடை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் புதிய படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் முதல் ஷெடியூல் ஷூட்டிங் ஜார்ஜியாவில் முடிவடைந்தது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிய ஷெடியூல் ஷூட்டிங் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்தில் இருந்து 2012-ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்த விஜய், அதற்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த ஜூலை 13-ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்யின் கோரிக்கையை நிராகரித்து அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.

மேலும், இந்த அபராத தொகை ரூ.1 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு விஜய் இன்னும் இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார். பின், விஜய் தனக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். தற்போது, இவ்வழக்கை இன்று (ஜூலை 27-ஆம் தேதி) விசாரித்த நீதிபதிகள் விஜய்-க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், விஜய் ஏற்கனவே 20% வரியை செலுத்திவிட்டதால், மீதமுள்ள 80% வரியை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Share.