ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தப்பி ஓடிய மீரா மிதுன்… ‘பேய காணோம்’ படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவில் உண்மையை போட்டுடைத்த இயக்குநர்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மீரா மிதுன். இவருக்கு அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘8 தோட்டாக்கள்’. ஸ்ரீகணேஷ் இயக்கியிருந்த இந்த படத்தில் வெற்றி – அபர்ணா பாலமுரளி ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை மீரா மிதுனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி’ என படங்கள் குவிந்தது. பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருக்கும் மீரா மிதுன், தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டே வருகிறார்.

சமீபத்தில், பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக நடிகை மீரா மிதுன் பேசிய வீடியோ மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கேரளாவில் இருந்த மீரா மிதுனை கைது செய்தனர். மேலும், அவரது நண்பர் ஷாம் அபிஷேக்கையும் போலீசார் கைது செய்தனர்.

பின், நடிகை மீரா மிதுனும், ஷாமும் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து மீரா மிதுன் வெளியே வந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘பேய காணோம்’ என்ற படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் நடிகை மீரா மிதுன். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது இப்படத்தின் இயக்குநர் செல்வ அன்பரசன் பேசுகையில் “ஆரம்பத்தில் சென்னையில் நடந்த ஷூட்டிங்கில் ஒழுங்காக கலந்து கொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார் மீரா மிதுன். பின், கொடைக்கானலில் சில நாட்கள் ஷூட்டிங் நடத்த ப்ளான் போட்டு அங்கு சென்றோம்.

அங்கு சில நாட்கள் ஒழுங்காக ஷூட்டிங்கில் கலந்து கொண்ட மீரா மிதுன், அந்த ஷெடியூல் முடிய இரண்டு நாட்கள் இருந்தும், அதற்கு முன்பாகவே நள்ளிரவில் எங்களிடம் எதுவும் சொல்லாமல் ஆறு பேருடன் சென்று விட்டார். பின், நான் இப்படத்தின் தயாரிப்பாளரிடம் மீரா மிதுன் இல்லாமல் எடுக்கும்படி கதையில் சில காட்சிகளை மாற்றி எடுக்கப்போவதாக சொல்லி அந்த ஷெடியூலை ஷூட் பண்ணி முடிச்சோம். படத்துக்கு ‘பேய காணோம்’ன்னு டைட்டில் வச்சுட்டு, ஷூட்டிங் ஸ்பாட்ல நாங்க படத்தின் ஹீரோயின் மீரா மிதுனை காணோம்னு தேடிட்டு இருந்தோம்” என்று கூறியுள்ளார்.

Share.