ஜாமீன் கேட்ட நடிகை மீரா மிதுன்… அதிரடி தீர்ப்பு வழங்கிய முதன்மை அமர்வு நீதிமன்றம்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மீரா மிதுன். இவருக்கு அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘8 தோட்டாக்கள்’. ஸ்ரீகணேஷ் இயக்கியிருந்த இந்த படத்தில் வெற்றி – அபர்ணா பாலமுரளி ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை மீரா மிதுனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி’ என படங்கள் குவிந்தது. பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருக்கும் மீரா மிதுன், தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டே வருகிறார்.

சமீபத்தில், பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக நடிகை மீரா மிதுன் பேசிய வீடியோ மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கேரளாவில் இருந்த மீரா மிதுனை கைது செய்தனர். மேலும், அவரது நண்பர் ஷாம் அபிஷேக்கையும் போலீசார் கைது செய்தனர். பின், நடிகை மீரா மிதுன் “நான் பல படங்களில் நடிப்பதற்காக கால்ஷீட் கொடுத்திருக்கிறேன்.

இப்போது என்னை கைது செய்துவிட்டதால், என்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு தான் அதிக நஷ்டம் ஏற்படும். அதனால், எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 19-ஆம் தேதி) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் மனு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.