பிரபல நடிகர் ‘நவரச நாயகன்’ கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் ‘நவரச நாயகன்’ கார்த்திக். அதன் பிறகு சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த கார்த்திக், மீண்டும் ரீ-என்ட்ரியாகி அருண் விஜய்யின் ‘மாஞ்சா வேலு’, விக்ரமின் ‘ராவணன்’, தனுஷின் ‘அனேகன்’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, மகன் கெளதம் கார்த்திக்கின் ‘Mr.சந்திரமௌலி’ ஆகிய படங்களில் நடித்தார்.

இப்போது, 60 வயதான கார்த்திக் மீண்டும் ஹீரோவாக நடித்து வரும் புதிய படம் ‘தீ இவன்’. இந்த படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார் டி.எம்.ஜெயமுருகன். இதில் மிக முக்கிய ரோல்களில் சுகன்யா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜான் விஜய், அபிதா மற்றும் பலர் நடித்து கொண்டிருக்கிறார்கள். இது தவிர பிரஷாந்தின் ‘அந்தகன்’ படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்து வருகிறார் கார்த்திக். இந்நிலையில், நடிகர் கார்த்திக் உடற்பயிற்சி செய்தபோது தவறி கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக கார்த்திக் தரப்பில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “காலில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டவுடன், உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்த காலில் மீண்டும் அடிபட்டதால் எலும்பில் சிறிது விரிசல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்சமயம் அவர் ஓய்வெடுத்து வருகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

Share.