திருப்பதி கோவிலில் காலணிகள் அணிந்து சென்றதால் சர்ச்சை… மன்னிப்பு கேட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட், O2’, மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் ‘ஜவான்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை நயன்தாராவின் காதல் கணவரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இதில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடித்திருந்தனர்.

நேற்று முன் தினம் (ஜூன் 9-ஆம் தேதி) நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட்டில் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று வந்தார். அப்போது இருவரும் சாமி தரிசனத்துக்கு பிறகு மாட வீதியில் நடந்து செல்லும் போது காலணிகள் அணிந்திருந்தது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க முடிவேடுத்துவிட்டது. தற்போது, இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட அறிக்கையில் “நானும் நயன்தாராவும் எங்களது திருமணத்தையே திருப்பதியில் தான் நடத்த திட்டமிட்டிருந்தோம். சில காரணங்களால் அங்கே நடத்த முடியாமல் போனது. அதனால் தான் திருமணம் முடிந்த அடுத்த நாளே திருப்பதிக்கு சென்றோம். மாட வீதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், காலணிகள் அணிந்திருந்ததை கவனிக்கவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Share.