பெண்குயின்-ஒரு தாயின் கதறல்!

ஆறு வருடங்களுக்கு முன் தொலைந்த தன் குழந்தையை தேடும் ஒரு தாயின் கதறலை வெளிப்படுத்தும் காவியமாக பெண் குயின் திரைப்படம் அமைந்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் புதுமுக இயக்குனரான ஈஸ்வர் கார்த்திக் கதை மற்றும் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் மகன் உட்பட நிறைய குழந்தைகள் தொடர்ந்து காணாமல் போகின்றனர். கீர்த்தி சுரேஷின் மகன் கிடைத்தாரா!?குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர் யார்?! போன்ற விருவிருப்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக கதைக்கரு அமைந்துள்ளது.

“ரிதம்” எனும் கதாபாத்திரத்தில் கீர்த்திசுரேஷ் ஒரு தாயின் கதறலை தன் நடிப்பின் மூலம் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ரிதமின் முதல் மகனான ‘அஜய்’எனும் கதாபாத்திரத்தில் மாஸ்டர் அத்வைத் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷின் முதல் மகன் கடத்தப்பட்டுள்ள நிலையில் கீர்த்தி சுரேஷின் மணவாழ்க்கை முடிந்துவிடுகிறது. இதை தொடர்ந்து இவர் இரண்டாவது திருமணம் செய்து கர்ப்பமாக இருக்கிறார். இருப்பினும் தொலைந்த தன் மகன் திரும்ப வருவான் என்று தவிப்பதாக இருக்கட்டும், கர்ப்பமாக இருக்கும் போது தைரியமாக தன் மகனை தேடி காட்டுக்குள் செல்லும் காட்சிகளாக இருக்கட்டும் தனது நடிப்பின் மூலம் கீர்த்திசுரேஷ் மிரட்டியிருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களான மாதம்பட்டி ரங்கராஜ் கீர்த்தி சுரேஷின் கணவராக வந்து ஓரளவுக்கு தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் வரும் காட்சிகளுக்கு தேவைப்படும் அழுத்தம் அவரது கதாபாத்திரத்தில் பெரிதாக காணப்படவில்லை. மருத்துவராக நடித்திருக்கும் மதி ஒரு காட்சியில் அவரது திறமையான நடிப்பின் மூலம் காண்பவரை மிரட்டும் படியாக நடித்திருப்பார்.

முதல் பாதியில் பெரிய அழுத்தம் எதுவும் இல்லாமல் கதை நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் வரும் சில டிவிஸ்ட்களால் கதை அவ்வப்போது சூடுபிடிக்கிறது.

குறிப்பாக சந்தோஷ் நாராயணனின் மிரட்டல் பின்னணி இசை கூடுதல் பலமாகும்.மேலும் படத்தின் காட்சிகள் நகர்ந்திருக்கும் மலை பிரதேசத்தையும், மர்மமான சூழ்நிலையை உருவாக்குவதிலும் தன் ஒளிப்பதிவின் மூலம் கார்த்திக் பழனி அசத்தியிருக்கிறார். இவை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தை மட்டும் அழுத்தமாக அமைந்திருக்கும் ஈஸ்வர் கார்த்திக் மற்ற கதாபாத்திரங்களையும் அழுத்தமாக அமைந்திருந்தால் படம் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

ஆறு வருடங்களாக குழந்தைகள் கடத்தப்பட்டு வரும் நிலையில் போலீசார் சற்று கவனக்குறைவாக நடப்பதுபோல் வரும் காட்சிகள் நம்பும்படியாக இல்லை. கடைசியாக தமிழில் வெளிவந்த ‘ராட்சசன்’ மற்றும் ‘சைக்கோ’ படங்களில் உள்ள திருப்பங்கள் போல இந்தப் படத்தில் பெரிய சுவாரஸ்யம் இல்லாவிட்டாலும், கீர்த்தி சுரேஷின் நடிப்பு பாராட்டுதற்குரியது அமைந்துள்ளது. புதுமுக இயக்குனரான ஈஸ்வர் கார்த்திக் இந்த சைக்கோ த்ரில்லரை அவரால் முடிந்த விதத்தில் சுவாரஸ்யமாகவே அமைத்திருக்கிறார்.

Share.