மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன ‘புஷ்பா’ பட ஹீரோ அல்லு அர்ஜுன்!

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகனும், டாப் ஹீரோ சிவராஜ்குமாரின் தம்பியுமான புனித் ராஜ்குமார், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தார். இவர் ஆரம்பத்தில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

அதன் பிறகு 2002-ஆம் ஆண்டு வெளியான ‘அப்பு’ தான் புனித் கதையின் நாயகனாக நடித்த முதல் படம். இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு புனித் ராஜ்குமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அபி, வீர கன்னடிகா, மௌரியா, ஆகாஷ், அஜய், அரசு, வம்ஷி, ராம், ப்ரித்வி, ஜாக்கி, பரமாத்மா, அண்ணா பாண்ட், பவர், ரண விக்ரமா, சக்ரவியூகா, ராஜகுமாரா, அஞ்சனி புத்ரா, யுவரத்னா’ என கன்னட படங்கள் குவிந்தது.

1999-ஆம் ஆண்டு அஷ்வினி என்பவரை திருமணம் செய்து கொண்டார் புனித் ராஜ்குமார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். புனித் ராஜ்குமார் நடிப்பில் ‘ஜேம்ஸ், த்வித்வா’ என இரண்டு புதிய கன்னட படங்கள் தயாராகி வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29-ஆம் தேதி காலை திடீரென புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின், சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் இயற்கை எய்தினார். தற்போது, புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று டாப் தெலுங்கு நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் அஞ்சலி செலுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து புனித்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறார் அல்லு அர்ஜுன்.

Share.