அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ரஜினிகாந்த்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது. இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது.

படத்தின் டைட்டிலே ‘அண்ணாத்த’ என்று திடீரென அறிவித்து விட்டார்கள். மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடிக்கிறது. இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. இதனையடுத்து புதிய ஷெடியூல் ஷூட்டிங் ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

கடந்த புதன்கிழமை இப்படக்குழுவினருக்கு ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்தபோது 4 பேருக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், நடிகர் ரஜினிக்கு டெஸ்ட் எடுத்து பார்த்ததில் நெகட்டிவ் என்று தான் வந்தது. இருப்பினும் படத்தின் ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்தியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். தற்போது, ரஜினி டிஸ்சார்ஜ் ஆகி சென்னையில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்று விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.