ரஜினிக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு… வாழ்த்து தெரிவித்த கமல்!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். அறிமுகமான முதல் தமிழ் படமே கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் அமைந்தது. அது தான் ‘அபூர்வ ராகங்கள்’. அதன் பிறகு ‘மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே, காயத்ரி, பைரவி, முள்ளும் மலரும், ப்ரியா, நினைத்தாலே இனிக்கும்’ என நடித்த எல்லா படங்களிலும் ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் ரஜினி.

100-வது படமாக ‘ஸ்ரீ ராகவேந்திரர்’, 125-வது படமாக ‘சிவா’வும் ரஜினிக்கு அமைந்தது. ரஜினி தமிழ் மட்டுமில்லாமல், ஹிந்தி, தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து மாஸ் காட்டியிருக்கிறார். 1981-ஆம் ஆண்டு லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரஜினிகாந்த். இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது. இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது.

படத்தின் டைட்டிலே ‘அண்ணாத்த’ என்று திடீரென அறிவித்து விட்டார்கள். மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தை இந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முன்னணி ஹீரோவும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான கமல் ஹாசன் ட்விட்டரில் “உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்” என்று கூறியுள்ளார்.

Share.