“இது ஒரு சாதாரண விஷயம்”… விஷால் கொடுத்த புகார் குறித்து விளக்கமளித்த ஆர்.பி.சௌத்ரி!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். பிரபல தயாரிப்பாளரின் மகனாக இருக்கும் விஷால், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார். விஷாலுக்கு முதல் படம் ‘செல்லமே’. இரண்டாவது படமான ‘சண்டக்கோழி’-யில் சண்டைக் காட்சிகளில் மாஸ் காட்டியிருந்தார் விஷால்.

‘லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி’ மெகா ஹிட்டானதும், நடிகர் விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’, ‘எனிமி’ மற்றும் அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நேற்று விஷால் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரில் “எனது படங்களை தயாரிப்பதற்காக ஆர்.பி.சௌத்ரியிடம் எனது வீட்டுப் பத்திரம் உட்பட சில உறுதிமொழி பத்திரங்களை ஆவணங்களாக கொடுத்து கடன் வாங்கியிருந்தேன். இப்போது கடனை திருப்பி கொடுத்த பின்பும் ஆர்.பி.சௌத்ரி உறுதிமொழி பத்திரங்களை திருப்பி கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்” என்று கூறியிருந்தார்.

தற்போது, இது தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீடியாவுக்கு கொடுத்த பேட்டியில் “இது ஒரு சாதாரண விஷயம் தான். ‘இரும்புத்திரை’ படத்திற்காக தான் விஷால், திருப்பூர் சுப்ரமணியத்திடமும், என்னிடமும் கடன் வாங்கியிருந்தார். அப்போது விஷால் கொடுத்த சில உறுதிமொழி பத்திரங்களை இயக்குநர் சிவக்குமாரிடம் தான் திருப்பூர் சுப்ரமணியம் கொடுத்து வைத்திருந்தார்.

சமீபத்தில், சிவக்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஆகையால், எனக்கும், திருப்பூர் சுப்ரமணியத்துக்குமே சிவக்குமார் விஷால் கொடுத்த பத்திரங்களை எங்கே வைத்திருந்தார் என்று தெரியவில்லை. வாங்கிய கடனை எங்களிடம் திருப்பி கொடுத்த விஷால், அவரது பத்திரங்களை வைத்து நாங்கள் எதுவும் தவறாக பயன்படுத்திவிடுவோமோ என்று பயப்படுகிறார். தற்போது, நான் வெளியூரில் இருக்கிறேன். மிக விரைவில் சென்னைக்கு சென்றதும் விஷாலிடம் இது குறித்து பேசி இப்பிரச்சனையை சரி செய்து விடுவேன்” என்று கூறியுள்ளார்.

Share.