“அவதூறு பரப்புரைகளிலிருந்து மீண்டுவர தம்பி விஜய்-க்கு துணை நிற்பேன்”… சீமான் அறிக்கை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் புதிய படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் முதல் ஷெடியூல் ஷூட்டிங் ஜார்ஜியாவில் முடிவடைந்தது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிய ஷெடியூல் ஷூட்டிங் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து 2012-ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்த விஜய், அதற்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த ஜூலை 13-ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்யின் கோரிக்கையை நிராகரித்து அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், இந்த அபராத தொகை ரூ.1 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு விஜய் இன்னும் இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார்.

தற்போது, இது தொடர்பாக திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் “அன்புத்தம்பி விஜய்! அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது! துணிந்து நில்! இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை! தொடர்ந்து செல்! ‘ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு’ என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி!” என்று குறிப்பிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Share.