ரீ-ரிலீஸான தனுஷின் ‘3’ திரைப்படம்… திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஆடியன்ஸுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

முன்னணி நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் மகளாகவும், பிரபல நடிகை அக்ஷரா ஹாசனின் அக்காவாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து கொண்டிருந்த ஸ்ருதி ஹாசனை ‘7-ஆம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தது தமிழ் சினிமா.

‘7-ஆம் அறிவு’ படத்துக்கு பிறகு நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘3, பூஜை, புலி, வேதாளம், சி3, லாபம்’ என படங்கள் குவிந்தது. நடிகையாக மட்டுமின்றி இசையிலும் அதிக ஆர்வம் உள்ள ஸ்ருதி ஹாசன் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு சூப்பராக இசையமைத்து அசத்தினார்.

மேலும், பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களில் ‘அடியே கொல்லுதே, கண்ணழகா காலழகா, உன் விழிகளில், ஏண்டி ஏண்டி’ போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி லைக்ஸ் குவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். இப்போது, நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ‘சலார்’ (கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி) மற்றும் பாலகிருஷ்ணாவின் 107-வது படம் (தெலுங்கு), சிரஞ்சீவியின் 154 படம் (தெலுங்கு) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

ஸ்ருதி ஹாசனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘3’. தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். தற்போது, இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகி விட்டதால் தெலுங்கு மொழியில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இப்படத்தை பார்த்து கொண்டிருந்த ஆடியன்ஸுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஸ்ருதி ஹாசன் அங்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுத்த வீடியோவை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Share.