“ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி”… ரஜினி போட்ட ட்வீட்!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார்.

கடந்த வாரம் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில் “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல. வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்!!!” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 12-ஆம் தேதி) நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, இது தொடர்பாக ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்று என்னை வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும், எதிர்கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மத்திய மற்றும் மாநில அரசியல் நண்பர்களுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும், சக திரைக்கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் மற்றும் உற்சாகத்துடன் என் பிறந்த நாளைக் கொண்டாடி வரும் உலகெங்கிலும் உள்ள என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று கூறியுள்ளார்.

Share.