வருமான வரி வட்டி விலக்கு கோரிய விவகாரம்… விரைவில் மேல்முறையீடு செய்யும் சூர்யா!

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த கடைசி படமான ‘சூரரைப் போற்று’ கடந்த ஆண்டு (2020) OTT-யில் ரிலீஸானது. ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸும் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’ என மூன்று படங்களும் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘நவரசா’ வெப் சீரிஸ் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸானது. ஒன்பது குறும்படங்களை கொண்ட இவ்வெப் சீரிஸில் சூர்யா ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இதனை இயக்கியிருந்தார்.

இந்நிலையில், வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு உயர் நீதிமன்றத்தில் சூர்யா வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இன்று (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக சூர்யா தரப்பினர் பேசுகையில் “ஏற்கனவே வருமான வரிக்கு வட்டியை செலுத்தி விட்டோம். வட்டிக்கு வட்டி செலுத்துவதிலிருந்து மட்டுமே விலக்கு கேட்டிருந்தோம். ஆகையால், எங்களது மனு தள்ளுபடி செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்” என்று கூறியுள்ளனர்.

Share.