“ஒரு பரீட்சை உங்க உயிரை விட பெருசில்ல”… மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நீட் தேர்வு எழுதி தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் தொடர்பாக சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் “அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே.. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்… அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே.. மாணவ மாணவிகள் எல்லாரும் வாழ்க்கையில அச்சமில்லாம நம்பிக்கையோடு இருக்கணும்னு ஒரு அண்ணனா வேண்டிக் கேட்டுக்குறேன். உங்களுக்கு போன வாரம் இல்லாட்டி போன மாதம் இருந்த ஏதோ ஒரு மிகப்பெரிய கவலை, வேதனை இப்போ இருக்கா? யோசிச்சுப் பாருங்க. நிச்சயமா குறைஞ்சிருக்கும். இல்லாம கூட போயிருக்கும்.

ஒரு பரீட்சை உங்க உயிரை விட பெருசில்ல. உங்க மனசு கஷ்டமா இருக்கா? நீங்க நம்புறவங்க, உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க, அப்பா – அம்மா, நண்பர்கள், ஆசிரியர்கள் யார்கிட்டயாவது மனசு விட்டு எல்லாத்தையும் பேசிருங்க. இந்த பயம், கவலை, வேதனை, விரக்தி இதெல்லாமே கொஞ்ச நேரத்துல மறையுற விஷயங்கள்.

இந்த தற்கொலை, வாழ்க்கையை முடிச்சுக்கிறேன்னு முடிவு எடுப்பதெல்லாம், உங்களை ரொம்ப விரும்புறவங்களுக்கு, அப்பா – அம்மா, குடும்பத்துக்கு நீங்க கொடுக்குற வாழ்நாள் தண்டனை. மறந்துடாதீங்க. நான் நிறைய exams-ல fail ஆகியிருக்கேன். ரொம்ப ரொம்ப கேவலமான marks வாங்கியிருக்கேன். அதுனால உங்கள்ல ஒருத்தனா நிச்சயமா சொல்ல முடியும்.

மதிப்பெண், தேர்வு இது மட்டுமே வாழ்க்கை இல்லை. சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கு. உங்களை புரிஞ்சுக்கவும், நேசிக்கவும் நிறைய பேர் இருக்கோம். நம்பிக்கை, தைரியம் இருந்தா வாழ்க்கைல எல்லாரும் ஜெயிக்கலாம். பெருசா ஜெயிக்கலாம். அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே” என்று கூறியுள்ளார்.

Share.