சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்துக்கு சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த 3 விருதுகள்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. சூர்யாவின் கேரியரில் 39-வது படமான ‘ஜெய் பீம்’-ஐ த.செ.ஞானவேல் இயக்கியிருந்தார். இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 2-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸானது.

சூர்யா வக்கீலாக நடித்திருந்த இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், தமிழ், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், இளவரசு, சுஜாதா சிவக்குமார், சிபி தாமஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்த ஆண்டு (2022) மார்ச் 27-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. சமீபத்தில், ஆஸ்கர் விருது வழங்கும் குழுவினர் இவ்விருதுக்காக பொதுப்பிரிவில் போட்டியிட்ட பல படங்களை பார்த்துவிட்டு, அதிலிருந்து தேர்வாகி அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ள படங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார்கள்.

அப்பட்டியலில் தேர்வாகியுள்ள 276 படங்களில் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் இடம்பெற்றிருந்தது. இந்த பட்டியலில் இருக்கும் படங்களை வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்து இறுதிப்பட்டியலை வருகிற பிப்ரவரி 8-ஆம் தேதி அறிவிப்பார்களாம். இந்நிலையில், 9-வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘ஜெய் பீம்’ படத்துக்கு சிறந்த படம், சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (லிஜோமோல் ஜோஸ்) என மூன்று விருதுகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share.