ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’… ஹீரோயின் யார் தெரியுமா?

முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றி அடைந்த படங்களின் லிஸ்டில் கண்டிப்பாக ‘சந்திரமுகி’ படத்துக்கும் ஒரு இடம் உண்டு. 2005-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பிரபல இயக்குநர் பி.வாசு இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார்.

இந்த படத்தில் ‘சந்திரமுகி’ என்ற பவர்ஃபுல்லான டைட்டில் ரோலில் ஜோதிகா நடித்திருந்தார். மேலும், பிரபு, வடிவேலு, நாசர், வினீத், மாளவிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஹாரர் ஜானரில் வெளி வந்த இந்த படத்தின் பார்ட் 2-வை இயக்க பி.வாசு திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், பிரபல நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிக்கப்போகிறார். இதனை சுபாஷ்கரன் தனது ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ மூலம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கவிருக்கிறார். இதிலும் காமெடியில் கலக்க வடிவேலு நடிக்கவிருக்கிறாராம்.

இந்த படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியாம். எம்.எம்.கீரவாணி இசையமைக்கவுள்ள இதற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். மிக விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.