மீண்டும் ‘நாய் சேகர்’-ஆக வடிவேலு… படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

‘என் தங்கை கல்யாணி’ படத்தில் சின்ன ரோலில் அறிமுகமான வடிவேலு, அதன் பிறகு ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ‘என் ராசாவின் மனசிலே’ படத்துக்கு பிறகு வடிவேலுவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. காமெடியனாக வலம் வந்த வடிவேலுவை ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன், தெனாலிராமன், எலி’ ஆகிய படங்களில் ஹீரோவாகவும் அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா.

இயக்குநர் சுராஜ் இயக்கிய ‘தலைநகரம்’ படத்தில் ‘நாய் சேகர்’, ‘மருதமலை’ படத்தில் ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘கத்தி சண்டை’ படத்தில் ‘டாக்டர் பூத்ரி’ போன்ற கதாபாத்திரங்களில் வலம் வந்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார் ‘வைகைப்புயல்’ வடிவேலு. தற்போது, புதிய காமெடி படத்துக்காக நடிகர் வடிவேலுவும் – இயக்குநர் சுராஜும் மீண்டும் கூட்டணி அமைக்கப்போகின்றனர் என்று தகவல் கிடைத்துள்ளது. ‘நாய் சேகர்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.

Share.