விஜய் – அஜித் படங்களின் நடன இயக்குநர் கூல் ஜெயந்த் காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.

இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடன இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் கூல் ஜெயந்த். பிரபு தேவா, ராஜூ சுந்தரம் ஆகியோரிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றி வந்த கூல் ஜெயந்த், ‘காதல் தேசம்’ படத்தில் தான் நடன இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார் கூல் ஜெயந்த். இவர் பணியாற்றிய 800 படங்களில் விஜய் மற்றும் அஜித் படங்களும் உண்டு. புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடன இயக்குநர் கூல் ஜெயந்த் இன்று இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share.