கார் விபத்து… மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் யாஷிகாவின் புகைப்படம்!

பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆரம்பத்தில் கெஸ்ட் ரோலில் வலம் வந்த படம் ‘கவலை வேண்டாம்’. அதன் பிறகு ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் ‘ஸ்ருதி’ என்ற கதையின் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

‘துருவங்கள் பதினாறு’ படத்துக்கு பிறகு ‘பாடம்’ என்ற படத்தில் ஹிந்தி டீச்சராக நடித்திருந்தார். பின், யாஷிகாவின் கேரியரில் மிகப் பெரிய ஹிட்டான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு பிறகு ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார்.

இப்போது, யாஷிகா ஆனந்த் நடிப்பில் ‘ராஜபீமா, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், கடமையை செய், பாம்பாட்டம், சல்பர்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 24-ஆம் தேதி நள்ளிரவு மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்துக்கு படுகாயம் ஏற்பட்டது.

காரில் யாஷிகாவுடன் பயணித்த அவரது தோழி வள்ளி ஷெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழிந்தார். இதனைத் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடன் காரில் பயணித்த அமீர், சையது இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின், அதிவேகமாக கார் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், யாஷிகாவின் ஓட்டுநர் உரிமத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். கடந்த வாரம், யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோழி வள்ளி ஷெட்டி பவானியின் மரணம் குறித்து உருக்கமான பதிவை போட்டிருந்தார். இந்த பதிவிற்கு பல ரசிகர்கள் யாஷிகாவை திட்டியும், சில ரசிகர்கள் யாஷிகாவுக்கு ஆறுதல் சொல்லியும் கமென்ட்ஸ் போட்டனர். தற்போது, மருத்துவமனையில் எடுக்கப்பட்ட யாஷிகாவின் ஸ்டில் ஒன்று வெளியாகியுள்ளது.

Share.