தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவர் நடிப்பில் ‘இறைவன், சைரன், ஜீனி’ மற்றும் இயக்குநர் எம்.ராஜேஷ் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
‘ஜெயம்’ ரவி நடிப்பில் 2015-ல் வெளியான படம் ‘தனி ஒருவன்’. இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான மோகன் ராஜா இதனை இயக்கியிருந்தார். இதில் ரவி ‘மித்ரன்’ என்ற போலீஸ் ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அரவிந்த் சாமி, தம்பி இராமையா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. சமீபத்தில், இதன் பார்ட் 2-வுக்காக ‘ஜெயம்’ ரவியும், அவரது அண்ணனும், இயக்குநருமான மோகன் ராஜாவும் மீண்டும் கூட்டணி அமைக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ வந்தது.
‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதன் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2024) ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் நடிக்க பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனிடமும், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.