இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் 1989ம் வருடம் வெளிவந்த திரைப்படம் “கரகாட்டகாரன்”. இந்த திரைப்படம் வெளிவந்து இன்றோடு 31 வருடங்கள் ஆகிறது.
கருமாரி கந்தசாமி மற்றும் ஜெ.துரை தயாரிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகர் ராமராஜன், கனகா கவுண்டமணி, செந்தில், சந்தானபாரதி, சந்திரசேகர், காந்திமதி, கோவை சரளா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவான இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்திற்கு ஏ.சபாபதி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்த படத்தில் வரும் “மாங்குயிலே பூங்குயிலே” என்ற பாடல் இப்பொழுதும்கூட ஏதேனும் ஒரு தொலைக்காட்சியிலோ அல்லது ரேடியோவிலோ இசைத்துக் கொண்டு தான் இருக்கிறது.
இந்த படத்தில் இரண்டு கரகாட்ட கும்பலுக்கு நடுவிலிருக்கும் போட்டி பற்றி கதை கரு அமைந்திருக்கும். இந்த படத்தில் வரும் கவுண்டமணி மற்றும் செந்தில் நகைச்சுவை காட்சிகள் இன்றும்கூட மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.இந்தப் படத்தில் வரும் வாழைப்பழம் குறித்த நகைச்சுவை காட்சி இன்றும் கூட மக்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.
1989ல் வெளிவந்த இந்த படம் சுமார் ஒரு ஆண்டுகாலம் திரையரங்குகளில் வெற்றிகரமாக அப்போது ஓடிக்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.