தமிழ் திரைப்படவுலகின் சிறந்த இயக்குனர் மற்றும் குணச்சித்திர நடிகரான மணிவண்ணன் இறந்து இன்றோடு 5 வருடங்கள் நிறைவு பெறுகிறது.
இயக்குனர் ,நடிகர் என அவதாரங்களை எடுத்து ,தன் திறமையால் நகைச்சுவை நடிகராக நடிப்பதாக இருந்தாலும் , வில்லனாக நடிப்பதாக இருந்தாலும் ,பாசமான ஒரு தந்தையாக நடிப்பதாய் இருந்தாலும் , தன் உழைப்பை முழுமையாக கொடுத்து ரசிகர்களிடையே நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது.
சத்யராஜ் ,மணிவண்ணன் என்று கூறினாலே நம் நினைவிற்கு வருவது அம்மாவாசை கதாபாத்திரம்தான். சத்யராஜை மணிவண்ணன் அம்மாவாசை என்று அமைதிப்படை படத்தில் அழைப்பார். இந்தப்படம் அந்தக்காலத்தில் அரசியல் பற்றி நகைச்சுவையாக கருத்துக்களை வெளியிட்ட படமாகும்.
நிஜ வாழ்விலும் சத்யராஜும் மணிவண்ணனும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள் . இவர்கள் இணைந்து ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரியதம்பி, கனம் கோர்ட்டார் அவர்களே, வாழ்க்கைச் சக்கரம், மனிதன் மாறிவிட்டான், உள்ளத்தில் நல்ல உள்ளம் ,புது மனிதன், அமைதிப்படை போன்ற நிறைய வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்கள்.
1979ஆம் ஆண்டு பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தின் படப்பிடிப்பின்போது மணிவண்ணன் பாரதிராஜாவிடம் வேலைக்கு சேர்ந்தார். அன்று முதல் பாரதிராஜாவை தன் குரு என்று அழைத்து வரும் மணிவண்ணன் பற்றி பாரதிராஜா ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை வெளியிட்டார். அதை படித்து மனமுடைந்த இவர் சில நாட்களில் மாரடைப்பால் உயிரிழந்தார். மணிவண்ணனை பாரதிராஜா கொன்றுவிட்டார் என்று அப்போது பேசப்பட்டது.
இவர் நிழல்கள் ,டிக் டிக் டிக் ,அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் போன்ற வெற்றி படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். இவர் பாரதிராஜாவோடு பல படங்களில் பணிபுரிந்துள்ளார். 1982 ஆம் ஆண்டு தன் முதல் படமான “கோபுரங்கள் சாய்வதில்லை”யை இயக்கினார். 50 படங்களுக்கு இயக்குனராக இருந்த இவர், கடைசியாக இயக்கிய படம் ” நாகராஜசோழன் .எம்எ.எம்எல்எ” . இவரது இயக்கத்தில் வெளிவந்த 35 படத்திற்கு மேல் வெற்றி படங்களாகும். இவர் முன்னணி நட்சத்திரங்களுடன் சுமார் 400 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.இவர் அரசியல் கட்சிகளிலும் சில காலம் பணியாற்றியுள்ளார்.
இத்தனை திறமைகளையும் நல்ல மனதையும் கொண்ட இந்த சிறந்த நடிகர் இறந்து இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைகிறது.