“தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக ‘லியோ’வில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன்”… மிஷ்கின் ட்வீட்!
February 27, 2023 / 08:27 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.
இதற்கு அனிருத் இசையமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குநர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் “இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன். minus 12 டிகிரியில் 500 பேர்கொண்ட ‘லியோ’ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.
ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியை படமாக்கினார்கள். உதவி இயக்குநர்களின் ஓயாத உழைப்பும், என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார். என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும், கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான்.
என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன். என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்தப்படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும், அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். ‘லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும். அன்புடன் மிஷ்கின்” என்று கூறியுள்ளார். இப்படத்தை இந்த ஆண்டு (2023) அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.