தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா, தனுஷின் ‘3’, கெளதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். 2004-ஆம் ஆண்டு டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா.
தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 17-ஆம் தேதி நடிகர் தனுஷும், இயக்குநர் ஐஸ்வர்யாவும் பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தனர். ஆகையால், இவர்கள் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக செய்திகள் பரவியது. இச்செய்தி ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமீபத்தில், ஐஸ்வர்யா இயக்கும் புதிய படமான ‘லால் சலாம்’-ன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் நடிக்க, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டில் பணியாற்றும் 3 வேலைக்காரர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகார் கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரிந்த ஈஸ்வரியும், கார் ஓட்டுநர் வெங்கடேஷனும் சேர்ந்து தான் நகைகளை கொள்ளையடித்தனர் என்று உறுதிசெய்யப்பட்டு, அவர்களை கைது செய்தனர்.
தற்போது, ஈஸ்வரி மற்றும் வெங்கடேஷனிடம் இருந்து 100 பவுனுக்கு மேல் நகைகளும், ஒரு வீட்டு பத்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்ததை விட அதிக நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் போலீசாருக்கு ஐஸ்வர்யா மேல் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஐஸ்வர்யாவை விசாரிக்கவும், அவரிடம் காணாமல் போன நகைகளுக்கான ரசீதையும் கேட்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.