சினிமாவில் பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி.இமான். இவர் தமிழ் மொழியில் இசையமைத்த முதல் படமே ‘தளபதி’ விஜய்யுடையது தான். அது தான் ‘தமிழன்’. இயக்குநர் மஜீத் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு பிறகு டி.இமானுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைத்து அசத்தினார்.
2008-ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார் டி.இமான். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி டி.இமான் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த ஆண்டு (2022) டி.இமான், அமலி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த டி.இமான் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “இந்த ஜென்மத்துல மீண்டும் நான் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு இசையமைக்க மாட்டேன்.
அதுக்கு காரணம் அவர் எனக்கு பண்ண மிகப் பெரிய துரோகம் தான். அதை பற்றி நான் விரிவாக வெளியே சொல்ல முடியாது. ஒரு வேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இந்த பேட்டியை பார்த்த பலரும் டி.இமானின் விவாகரத்துக்கு காரணமே சிவகார்த்திகேயன் தான் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வண்ணமுள்ளனர்.
தற்போது, இசையமைப்பாளர் டி.இமானின் முதல் மனைவி மோனிகா மீடியாவுக்கு கொடுத்துள்ள ஒரு பேட்டியில் “நடிகர் சிவகார்த்திகேயன் எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட் தான். எங்க ஃபேமிலி மேல எப்பவுமே அவருக்கு ரொம்ப அக்கறை உண்டு. எனக்கும், இமானுக்கும் விவாகரத்து நடக்கக் கூடாதுன்னு சிவகார்த்திகேயன் நினைச்சாரு. ஆனா, இமானுக்கு என்கூட சேர்ந்து வாழ விருப்பம் இல்லை.
இமானுக்கு இப்போ பட வாய்ப்புகள் அதிகமா இல்லை. அவர் சிவகார்த்திகேயன் துரோகம் பண்ணிட்டாருன்னு சொன்னதும், வெளியே எல்லாரும் வேற மாதிரி புரிஞ்சுக்கிட்டாங்க. அவர் எங்களுக்கு எந்த துரோகமும் பண்ணல. இமான் பேசிய விஷயம் சிவகார்த்திகேயனின் குடும்பத்தை எந்த அளவுக்கு பாதிக்கும்னு அவர் நினைக்கவே இல்லை” என்று கூறியுள்ளார்.