கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1.30 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் அது தன்னுடைய கோரமுகத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் ஆரம்ப கட்டத்தில் உள்ள இந்தியாவில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. அனைத்து துறைகளும் முடங்கியுள்ள நிலையில், சினிமாத்துறை முற்றிலுமாக நிலைகுலைந்துள்ளது. வேலையில்லாமல் தவிக்கும் தமிழ் சினிமா தொழிலாளர்களுக்காக ஃபெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. ரஜினிகாந்த், அஜித்,லாரன்ஸ்,நயன்தாரா,காஜல்,கங்கனா என்று அனைவரும் நிதியளித்துவிட்டனர்.
இதுமட்டுமல்லாமல் ஏராளமான நடிகர்கள் அரசு, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் மட்டும் நிதியுதவி ஏதும் செய்யாமல் இருந்த நிலையில் தற்போது அவர் 1.30 கோடி ரூபாய் நிவாரணமாக அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சமூக வலைதளத்தில் விஜய்யை புகழ்ந்து ரசிகர்கள் வழக்கம் போல பதிவுகளும், ஹேஷ்டாக்குகளை ஷேர் செய்து வருகின்றனர்.
விஜய் தரப்பு வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.