உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், தமிழகத்தில் அதுவும் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இன்று காலை நிலவரப்படி சென்னையில் மட்டும் 34 ஆயிரத்து 245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18,565 பேர் குணமடைந்துள்ளனர்.
15 ஆயிரத்து 257 பேர் கொரோனா பாதிப்புடன் சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் காரணமாக சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு ஜூன் 19ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் வாழும் பிற ஊர்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதனால் சென்னையின் எல்லையில் உள்ள சோதனை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலை குறித்து இயக்குனர் சேரன் தன் ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருவரையும் டேக் செய்து” ஐயா ..சென்னையின் நிலை சுகாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் கவலைக்கிடமாகி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு காரணமாக பயந்து 90 நாட்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர்கள், பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டமான சூழலில் இருக்கிறார்கள். இதனால் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று முடிவெடுத்து செல்ல முற்படுகிறார்கள். எனவே சென்னையில் நீங்கள் கொரோனாவை கட்டுப்படுத்த ஒரு நல்ல வழி, கொரோனா தொற்று இல்லாதவர்களை சோதனை செய்து அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாகும். அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களை கண்டறியவும் ,அதற்கு சிகிச்சை அளிப்பதற்கும் ஏதுவாக இருக்கும் இது என் தாழ்மையான கருத்து” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்” மக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில், அவர்களை உயிரோடு வைத்துக்கொள்ள தங்கள் சொந்த ஊருக்கு செல்ல நினைக்கிறார்கள் இது நியாயமான செயலும் கூட! அதற்காக முறையே யோசித்து செயல்படுவது தங்கள் கடமையாகும் என்று நினைவூட்டுகிறேன்” என்றும் கூறியிருக்கிறார்.