வளர்ந்து வரும் அருண்விஜய்க்கு வில்லனான மாறிய தயாரிப்பாளர்..!
June 24, 2020 / 02:41 PM IST
|Follow Us
பிரபல தமிழ் நடிகரான அருண்விஜய், ஆரம்ப காலங்களில் அவரது படங்கள் எதுவும் சரியாக இல்லாமல், பின்பு தல அஜித் நடிப்பில் வெளிவந்த “என்னை அறிந்தால்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்தார். அன்றிலிருந்து வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
இவர் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “பாக்ஸர்”. புதுமுக இயக்குனரான விவேக் இயக்கத்தில், டி.இமான் இசையில் இந்தப் படம் உருவாகவுள்ளது. வி.மதியழகன் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளார்.இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக குத்துச்சண்டை வீராங்கனை மற்றும் நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் அருண்விஜய் ஒரு பாக்ஸராக நடித்துள்ளாராம். மேலும் இதற்காக அவர் பல மாதங்களாக பாக்சிங் மற்றும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டு இந்த கதாபாத்திரத்திற்காக தன்னை தயார் செய்து கொண்டுள்ளாராம்.
இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் கஷ்யப் நடிக்கவிருப்பதாக செய்தி வந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக தற்போது இந்த வில்லன் கேரக்டரில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மதியழகனே நடிக்க உள்ளதாக செய்தி வந்துள்ளது.
இதை பற்றி தயாரிப்பாளர் மதியழகன் “இதற்கு முன்னர் இருந்தே பல கதாபாத்திரங்களில் என்னை நடிப்பதற்கு கேட்டார்கள், ஆனால் நான் அப்போது தயாராக இருக்கவில்லை. இந்த லாக்டவுன் காலத்தில் உடற்பயிற்சி செய்து நடிப்பதற்காக என்னை மெருகேற்றிக் கொண்டேன், அதனால் இந்தப்படத்தில் வில்லனாக ஒப்புக்கொண்டேன். எனக்கு ஹீரோவாக நடிப்பதில் எந்த நோக்கமும் இல்லை. நடிகர் நவாசுதீன் சித்திக் போன்று பன்முக வேடங்களில் நடிப்பதே எனது ஆசை. அவர்தான் என் ரோல் மாடல்” என்றிருக்கிறார்.
மேலும் இந்தப்படத்தில் அருண் விஜய் பாக்ஸராக இருப்பார்.அவரது மேனேஜர் வேடத்தில் அனுராக் காஷ்யப் நடிக்கவிருந்தார்.ஆனால் கால்ஷீட் காரணமாக இப்போது அந்த வேடத்தில் நான் நடிக்கிறேன். இதில் பாக்ஸர் அந்த மேனேஜரை விட்டு பிரிந்து செல்வதால், இவர் வில்லனாக மாறுவார் என்று கதை பற்றி ஒரு சுவாரசியமான தகவலையும் இவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் இவர்” நான் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் அது பேசப்படும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும். சில நேரம் மட்டும் திரையில் வந்த செல்லும் நடிகராக இருக்க எனக்கு விருப்பமில்லை. நடிக்க வேண்டும் என்பதை நான் என் கேரியராக தேர்ந்தெடுத்துள்ளேன். அதனால் என் முழு உழைப்பையும் இதற்கு தருவேன்” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
இந்த திரைப்படத்தின் படவேலைகள் லாக்டவுன் முடிந்ததும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.